நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் – நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் உரையுடன்…

நடப்பாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.

குடியரசுத் தலைவரின் உரையை தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த ஆய்வறிக்கை, ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில், 2024ஆம் ஆண்டு இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 விழுக்காடாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கி, ஐஎம்எஃப் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்த வளர்ச்சி விகிதம் கணிக்கப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் உலகளாவிய பொருளாதார அரசியல் நிலவரங்களின் அடிப்படையில் உண்மையான உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 6 சதவீதம் முதல் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி விகித கணிப்பான 7 சதவீதத்தைக் காட்டிலும் இது குறைவு என்ற போதிலும் கொரோனா பாதிப்பு போன்றவற்றால் நாடு விரைவாக மீண்டு 7 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2023-24 ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 6.8 சதவிகிதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.