தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மேலும், 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 7, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்று, 12-ஆம் தேதி அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.
இந்த நிலையில், சுதந்திர தினத்தை ஒட்டி சட்டப்பேரவைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் சட்டப்பேரவை ஆகஸ்ட் 17-ஆம் தேதி கூடியது. அப்போது முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நேற்று பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இத்துறைகள் முதலமைச்சர் விஜய் வசமுள்ளதால், இத்துறைகள் சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மானிய கோரிக்கை சார்ந்து எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் திங்கட்கிழமை பதிலளிக்க உள்ளார்.
முன்னதாக இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும், தமிழை சென்னை உயர்நீதுமன்றத்தில் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும். தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




