கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்த தடை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்த அரசு தடை விதிப்பது ஏற்புடையதல்ல என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாபது, “தமிழகத்தின் பெரிய கோவில்களுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்லக் கூடாது என தவெக அரசு பிறப்பித்த ஆணை மக்களிடையே கடும் விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில். கோவிலுக்குள் செல்லும் முன் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்க வேண்டும் எனவும், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அரசு கூறுவது கொஞ்சம் கூட ஏற்புடையதல்ல.


சுமார் 40,000-க்கும் அதிகமான பிரபலமான கோவில்களைக் கொண்டுள்ள தமிழகத்திற்கு, வெளிமாநிலத்தவர்கள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மணிக்கணக்காக வரிசையில் காத்திருந்து இறைவனை தரிசிக்கிறார்கள். அப்படியிருக்கையில் கோவிலுக்குள் இருக்கும் நேரத்தில் பக்தருக்கோ அல்லது அவரது குடும்பத்தாருக்கோ ஏதாவது ஒரு எமர்ஜென்சி ஏற்பட்டு தொடர்பு கொள்ள முடியாமல் போனால் அதற்கு யார் பொறுப்பேற்பது? பள்ளிகள். மருத்துவமனைகளில் “ரீல்ஸ்” எடுத்து அட்டகாசம் செய்யும் தவெகவினரை கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு. கோவில்களுக்கு வரும் பக்தர்களின் செல்போன்களை பறிப்பது எந்த விதத்தில் நியாயம்?

அதுமட்டுமன்றி, தரிசனத்திற்கும் சரி. தங்களது உடமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும் சரி பக்தர்களே கட்டணம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றால், கோவில்களுக்கு வரும் காணிக்கைகளும் நன்கொடைகளும் எங்கே செல்கின்றன? முதல்வர் அலுவலகத்தை புனரமைக்கும் பணிகளுக்கான டெண்டரில் துவங்கிய ஊழலானது. கோவில்களில் உள்ள செல்போன் லாக்கருக்கான ஒப்பந்தம் வரை தொடர்கிறதா?

தமிழகத்தில் உள்ள தேவாலயங்களும் மசூதிகளும் எவ்வித கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக இயங்கி வரும் நிலையில், இந்துக் கோவில்கள் மீது மட்டும் எதற்காக இத்தனை விதிமுறைகள் ஏவப்படுகின்றன? “மதச்சார்பின்மை” என்ற போர்வையில் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் எல்லாம், இந்துக் கோவில்களின் மீது மட்டும் முழு ஆதிக்கம் செலுத்த துடிப்பது ஏன்? தமிழகத்தில் தற்போது நடப்பது அனைவருக்குமான ஆட்சியா அல்லது சிறுபான்மையினருக்கான ஆட்சியா?
எனவே, கோவில்களில் “ரீல்ஸ்” கலாச்சாரம் பரவுவதைத் தடுக்க, கடுமையான கண்காணிப்பு வளையத்தை உண்டாக்க வேண்டுமே தவிர, பக்தர்களின் அடிப்படை உரிமையை அரசு பறிக்கக் கூடாது என முதல்வர் விஜயை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.