திருச்சியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் கௌதம் என்பவர் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மரக்கடை, ஜீவா நகரை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் கௌதம். தெப்பக் குளத்தில் உள்ள, தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் 16 பேர், குழுவாக முக்கொம்பு மேலணையில் சுற்றி பார்ப்பதற்காக சென்று உள்ளனர்.
தற்போது காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்து இருப்பதால் , குளிப்பதற்கு திட்டமிட்ட மாணவர்கள் ஒன்றாக காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக கௌதம் என்கிற மாணவன் ஆழமான பகுதியில் சிக்கினார். அப்போது செய்வதறியாது திகைத்த சக மாணவர்கள், கௌதமை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது நீரில் மூழ்கி கௌதமை இறந்த நிலையில் சடலமாக
மீட்டனர்.
விடுமுறை நாட்களில் ஆறு, ஏரி போன்ற இடங்களில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து குளிப்பதற்காக ஆவலுடன் செல்லும்போது, இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவது
தொடர் கதையாகி உள்ளது.







