கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பள்ளி மாணவி, தன் உயிரை காப்பாற்றுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசித்து வருபவர் கனிமொழி. இவரது கணவர் முத்தழகன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது 14 வயது மகள் அபிநயா ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு காலில் எஸ்.இ.எல் என்ற அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டு, இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இவரது இரண்டு கால்களையும் அகற்ற வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மேல்சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அபிநயா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா, மருத்துவ செலவு செய்ய முடியாமல் உயிருக்கு போராடி வருகிறார். எனவே தனக்கு மருத்துவ உதவிகள் செய்து, தனது உயிரை காப்பாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.







