நிதி நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு மக்கள் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், நிதிநிலை நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள ஆய்வு மேற்கொள்ள மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,…

தமிழ்நாடு அரசு மக்கள் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், நிதிநிலை நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கள ஆய்வு மேற்கொள்ள மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மதுரையை சேர்ந்த தமிழ்நாடு வர்த்தக சங்க நிர்வாகிகள், சிறு-குறு தொழிற்சங்கத்தினர், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் முனைவோர், நெசவாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், மகளிர் சுயஉதவி குழுவினர், ராமநாதபுரம் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசைத் தேடி மக்கள் வந்த காலம் மாறி, தற்போது அரசு மக்களைத் தேடி வந்துள்ளதாக கூறினார். தமிழ்நாடு அரசு மக்கள் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறினார். மேலும், விவசாயிகளின் கருத்துகளை கேட்டு விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனக்கூறிய அவர், அனைத்து துறைகளின் கருத்துகளைக் கேட்டுத்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என குறிப்பிட்டார்.

நிதிநிலை நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திமுக கொடுத்த வாக்குறுதியில் 25 சதவீத திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டி உள்ளது. எனவே  கூட்டத்தில் கலந்துகொண்ட தொழில்துறையினர் கோரிக்கைகள், தேனி மாவட்ட தோட்டக்கலைத்துறை விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள், இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கோரிக்கைகள், ஐந்து மாவட்ட தொழில்துறையினரின் கோரிக்கைகள் என அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.