கரும்புத் தோட்டத்தை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சாமன்னக்கவுண்டர் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி குப்பம்மாளும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இரண்டாவது மனைவி பாஞ்சாலை.இவர்களுக்கு திலகவதி, அருணா என்ற இரு மகள்களும், பாஸ்கர் என்ற மகனும் உள்ளனர்.
பாஞ்சாலை கணவர் மறைவிற்கு பின்னர் அவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பாக பாஸ்கர் தனது சித்தியான பாஞ்சாலைக்கு தெரியாமல் தனது சகோதரிகளிடம் வங்கிக்கடன் பெறுவதற்காக கூறி கையெழுத்து பெற்று அதே பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரிடம் போலியாக பத்திரம் தயார் செய்து விற்பனை செய்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் பழனியும் இறந்து விட்ட நிலையில் பழனியின் மனைவி ஜெயலட்சுமியிடம் அழிஞ்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அசோக் ஆகியோர் மீண்டும் தனியாக போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்றுள்ளனர் என கூறப்படுகிறது.
இது சம்பந்தமான வழக்கானது வாணியம்பாடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் போலி பத்திரம் செய்து நிலத்தை வாங்கிய அழிஞ்சிகுளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் , அசோக் ஆகியோர் நூற்றுக்கும் மேற்பட்ட அவரது அடியாட்களுடன் பாஞ்சாலை விவசாயம் செய்திருந்த ஒரு ஏக்கர் கரும்பு தோட்டத்தில் 5 டிராக்டர்களை முன்னறிவிப்பின்றி இறக்கி கரும்பு பயிர்களை சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவரது அடியாட்கள் 100 க்கும் மேற்பட்டோர் கரும்புத் தோட்டத்தில் இறங்கி முள்வேலி அமைத்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனை தடுக்க சென்ற பாஞ்சாலை மற்றும் அவரது உறவினர்களை தாக்க முற்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பாஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர் பயிர்களை சேதபடுத்திய டிராக்டர்களை அப்புறப்படுத்தியோடு நிலத்தை அபகரித்து முள்வேலி அமைத்திருந்த ரமேஷ், அசோக், மீனாட்சி மற்றும் அவரது அடியாட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-வேந்தன்







