வெங்காயம், தக்காளி ஆண்டுதோறும் சீராக கிடைக்க புதிய திட்டம்!

பொதுமக்களுக்கு வெங்காயம், தக்காளி ஆண்டுதோறும் சீராக கிடைக்க உற்பத்தி திறனை அதிகரிக்க ரூ.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.…

பொதுமக்களுக்கு வெங்காயம், தக்காளி ஆண்டுதோறும் சீராக கிடைக்க உற்பத்தி திறனை அதிகரிக்க ரூ.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர்,  தக்காளி, வெங்காயம் தமிழ்நாட்டு சமையலில் இன்றியமையாத அம்சங்களாகிவிட்டன. அனைத்து நாட்களிலும் தேவைப்படும் இவை, பருவத்தில் மட்டும் அதிகமாக உற்பத்தியாகி, உழவர்கள் பறிக்காமலேயே விட்டு விடுகிற நிலை ஏற்படுகிறது. மற்ற காலங்களில், சாமானியர்களால் வாங்க முடியாத விலைக்கு விற்கப்படுகிறது.

இதனை சரி செய்யும்பொருட்டு, ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தக்காளி, வெங்காயம் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பெரம்பலூர், நாமக்கல், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் விதைப்பு இயந்திரங்கள், சேமிப்பு கட்டமைப்புகள், அறுவடை இயந்திரங்கள், வெங்காயத்தாள் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகிய உதவிகள் வழங்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெங்காய வரத்து நிலைப்படுத்தப்படும்.

தக்காளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, சொட்டு நீர்பாசனம் அமைத்தல், அதிக மகசூல் தரும் ரகங்களை பயிரிடுதல், மூடாக்கு இடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும்.

இத்திட்டம் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ரூ.19 கோடியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.