வெளிநாட்டு வேளாண் தொழிநுட்பங்களை தெரிந்து கொண்டு, அதனை நமது மாநிலத்தில் பயன்படுத்தும் வகையில், இஸ்ரேல், நெதர்லாந்து, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் உழவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர், அயல்நாடுகள் சிலவற்றின் உயர் ரகத் தொழில்நுட்ப பயன்படுத்தப்பட்டு உற்பத்தி திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருக்கின்றது. அங்கிருக்கும் தொழில்நுட்பங்களை நம் விவசாயிகள் பார்ப்பதால் அவர்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கும். நாமும் அப்படி உற்பத்தி செய்ய முடியாதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தும். அது சாகுபடியின் தேக்கத்தை நீக்கி தேடலை உண்டாக்கும்.
எனவே அயல்நாடுகளில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது ஊக்கத்தை உண்டாக்கும் என்பதால் இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு தமிழக உழவர்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.
ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 150 முன்னோடி விவசாயிகள் அயல்நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அமைச்சர் அறிவித்தார்.
அண்மைச் செய்திகள்: 10 பொருட்களுக்கு புவி சார் குறியீடு பெற திட்டம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பண்ணை சுற்றுலா திட்டம்
பாடப்புத்தகங்களில் படமாகவும், ஊடகங்களில் காணொலியாகவும் கண்ட வயல்களை, தோப்புகளை, பழ மரங்களை மாணவர்கள் நேரடியாக காண வேண்டும் எனபதற்காக கல்வித்துறையுடன் இணைந்து பண்ணைச் சுற்றுலா செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். மாணவ சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த சுற்றுலா திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








