அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நலம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த நிகழ்வு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மதுசூதனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுசூதனின் உடல்நலம் குறித்து விசாரிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு வந்தார்.

இதனைத்தொடர்ந்து சற்று நேரத்தில் சசிகலாவும் தனியார் மருத்துவமனைக்கு வந்து மதுசூதனனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சசிகலா மருத்துவமனைக்கு வருகை தந்தவுடன், எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, அவைத்தலைவர் மதுசூதனன் அதிமுக மீது அதிக பற்று கொண்டவர் என தெரிவித்தார். மேலும், மதுசூதனன் நலம்பெற வேண்டும் என இறைவனை வேண்டுவதாகவும் கூறினார். மேலும், மதுசூதனனின் உடல்நிலை குறித்து அவரது உறவினர்களிடம் கேட்டறிந்ததாக தெரிவித்த சசிகலா, மதுசூதனனையும் பார்த்துவிட்டு வந்ததாக தெரிவித்தார்.







