#Samsung வேலைநிறுத்தம் | பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு – ஊழியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்கள் முதலமைச்சர் கோரிக்கை ஏற்று பணிக்கு செல்லவேண்டும் எனவும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை…

#Samsung employees on strike | Smooth solution in negotiations - Minister Thamo. Anparasan request for employees to return to work!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்கள் முதலமைச்சர் கோரிக்கை ஏற்று பணிக்கு செல்லவேண்டும் எனவும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 9-ம் தேதி முதல் ஆலைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க அங்கீகாரம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 1500-க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஆலை நிர்வாகம் தெரிவித்தது. அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, சி.வி. கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்னையில் சுமுக தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை ஆணையர் கமலக்கண்ணன், இணை ஆணையர் ரமேஷ் முன்னிலையில் 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்கவில்லை. இதனால்,6ம் கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டாமால் முடிவடைந்தது.

தொடர்ந்து, மாலை 3 மணியளவில் அமைச்சர்கள் குழு தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சாம்சங் மூத்த நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முதலமைச்சர் இந்த பிரச்னை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக அமைச்சர்கள் குழு தெரிவித்தனர். பின்னர் அமைச்சர்கள் குழு மற்றொரு சாம்சங் தொழிலாளர்கள் குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், “சாம்சங் விவகாரம் தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். சாம்சங் நிர்வாகிகள் 14 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் முதலமைச்சர் கோரிக்கை ஏற்று பணிக்கு செல்லவேண்டும். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு இந்த பேச்சுவார்த்தையை நடத்தினோம் இந்த பேச்சு வார்த்தையில் சமூக தீர்வு காணப்பட்டுள்ளது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சாம்சங் போராட்டம் தொடர்வதாகவும், அமைச்சர் முன்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனவும் சிஐடியூ தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் வரக்கூடிய உடன்பாடு ஏற்பட்டது என்ற செய்தி உண்மைக்கு மாறானது எனவும், சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எதிரானது எனவும், போராட்டத்தை திசை திருப்பும் இந்த நடவடிக்கைகளை சிஐடியு வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.