தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை ஆர்.என்.ரவி சிதைத்துக் கொண்டு இருப்பதாக திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் பிறந்த ஆர்.என்.ரவியை விட, இந்தியாவில் பிறக்காத கார்ல் மார்க்ஸுக்கு இந்தியாவைப் பற்றி நன்கு தெரியும். ஏனென்றால் மனித மனத்துக்கு அடிப்படையான அறம், மார்க்ஸ் மனதில் இருந்தது. அதனால் இந்தியாவை நன்கு புரிந்து கொண்டார். 200 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்ஸ் புரிந்து கொண்டார்.
இதையும் படிங்க – பரோட்டோ போடுதல், தோசை சுடுதல், டீ விற்றல்… இது தான் தேர்தல் பரப்புரையா?
“கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூகக் கோட்பாடுகளைச் சிதைக்க வேண்டும் என்று கட்டுரை எழுதி இருக்கிறார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவைச் சிதைத்தது. இதனால் இன்று மார்க்சின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது” – என்று கிண்டி ‘ராஜ்பவனை’ ஆர்.எஸ்.எஸ். இன்ஸ்டிடியூட் ஆக ஆக்கிக் கொண்டிருக்கும் ஆளுநர் ரவி சொல்கிறார்.
இந்தியாவின் சமூகக் கோட்பாடு என்ன என்பதைச் சொன்னால், எதனைச் சிதைத்தார் மார்க்ஸ் என விளக்கம் அளிக்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வெளியிடும் துண்டுப் பிரசுரங்களின் பின்னட்டைக் குறிப்புகளை வைத்துக் கொண்டு நித்தமும் ஏதேதோ பேசி வருகிறார் ஆளுநர். இவருக்கு இந்தியாவைப் பற்றியும் தெரியவில்லை, மார்க்ஸைப் பற்றியும் தெரியவில்லை. இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதிய குறிப்புகளை முழுமையாக அறிந்திருந்தால் அவர் இப்படிப் பேசி இருக்க மாட்டார்.
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்து, தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களைச் சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி என்பதுதான் உண்மை. இவரது சிந்தனை தமிழ்நாட்டைச் சிதைக்க முயற்சிக்கிறது. இதனை தமிழ்நாட்டு மக்கள் பொருட்படுத்துவதே இல்லை என்பதுதான் பேருண்மை.
இவ்வாறு முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.








