டெல்லியில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு விரக்தியடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். கொள்கையோ தொலைநோக்குப் பார்வையோ இல்லாத எதிர்க்கட்சிகள், நாட்டில் குழப்பத்தையும் அராஜகத்தையும் உருவாக்கவே பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகின்றன.
தேர்தல் ஆணையம் தனது விளக்கங்கள் மூலம் அவர்களின் அனைத்துப் பொய்களையும் அம்பலப்படுத்திவிட்டது. மேலும் பேசியவர், ராகுல் காந்தி கவனமாகக் கேட்க வேண்டும், ஒரு பொய்யை நூறு முறை சொல்வதால் அது உண்மையாகி விடாது; உண்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது” என்றார்.
மேலும், ராகுல் காந்தி, அரவிந்த் கெஜிரிவால், அகிலேஷ் யாதவ் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் குற்றச்சாட்டுகளைச் சுமத்திவிட்டு ஓடிவிடுவதாகவும், அரசியலமைப்புச் சட்ட அமைப்புகளைச் சீர்குலைப்பதே அவர்களின் ‘டூல்கிட் மனநிலை’ என்றார். பாஜகவைப் பொறுத்தவரை அதிகாரம் என்பது 140 கோடி மக்களுக்குச் சேவை செய்வதற்கானது என்றும் எதிர்க்கட்சிகளின் இரட்டை நிலப்பாட்டையும், அரசியலையும் பொதுமக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளதாகவும், ஜனநாயக முறையில் அவர்களுக்குப் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.




