டெல்லியில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்பு – உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

டெல்லியில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

தென்கிழக்கு டெல்லியில் உள்ள கல்காஜி மந்திர் அருகே உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில், செப்டம்பர் 21ம் தேதி, காவல்துறையினர் போல் நடித்த மூன்று நபர்களால் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இவ்வாறு பொதுப் பூங்காவில் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

நீதிபதி ஜெ.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்ததோடு, அதை விசாரணைக்குப் பட்டியலிடுமாறு உச்சநீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டது.

அப்போது, பேசிய நீதிபதிகள், கடந்த 2012ம் ஆண்டு நிர்பயா வழக்கோடு வேதனையான ஒப்புமைகளை காணமுடிகிறது என்று தெரிவித்தனர். மேலும், நிர்பயா சம்பவம் நடைபெற்று இத்தனை ஆண்டுகள் கடந்தும் அமைப்பு ரீதியான சட்ட அமலாக்க வழிமுறைகள் முன்னேற்றம் அடைந்துள்ளனவா என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்புவதாகவும் கவலை தெரிவித்தனர்.

இந்த மாதம் தேசிய தலைநகர் டெல்லியில் குறைந்தது 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும், டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் அதிகரித்து வரும் இந்த சம்பவங்கள், அடிப்படை பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிர்வாகம் மற்றும் அமைப்பு ரீதியிலான தோல்வியை தெள்ளத்தளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுவதாக குறிப்பிட்டனர்.

மேலும் அச்சமின்றி கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்பது அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவின் கீழ் உறுதிசெய்யப்பட்ட அடிப்படை உரிமையாகும் என சுட்டிக காட்டிய நீதிபதிகள், பூங்காக்கள், சாலைகள், பேருந்து, மெட்ரோ நிலையங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் நடை மேம்பாலங்கள் உள்ளிட்ட பொது இடங்கள், போதிய வெளிச்சமின்மை அல்லது கண்காணிப்பின்மை, ரோந்துப் பணியின்மை அல்லது தடுக்கக்கூடிய பிற நிர்வாகக் குறைபாடுகள் காரணமாக அதிக அபாய மண்டலங்களாக மாறுவதை அனுமதிக்கக்கூடாது என்று அழுத்தமாக தெரிவித்தனர்.

அதேவேளையில், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொது நிர்வாகம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் கவலை தெரிவித்து வெளியிடும் அறிக்கைகள் புரிந்துக் கொள்ளக்கூடியவை என்றாலும் பொறுப்புக்கூறல் இல்லாதது மிகப்பெரும் குறைபாடாக உள்ளது என தெரிவித்தனர்.

“ஒற்றுமையை வெளிப்படுத்துவது மற்றும் ஒன்றுபட்டு நிற்பது இந்த சமூகத் தீமைக்குத் தீர்வாகாது,” எனக் கூறிய நீதிபதிகள், குற்றங்களைத் தடுப்பது, பொது அமைதியை காப்பது, பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் இந்து போன்றவசம்பவங்களை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.