சென்னையை போல மேலும் 5 நகரங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித் துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அமைச்சரான பின் அவர் அளித்த முதல் பேட்டி இது. அப்போது அவர் கூறும்போது, சென்னை மட்டுமின்றி மதுரை, கோவை, நெல்லை, சேலம், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ரெம்டெடிசிவிர் மருத்துகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சராவதற்கு முன்பே அந்தப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து செயல்படும். கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
கொரோனா தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்கள பணியாளஎர்களுக்கு படுக்கை வசதி சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகத்தான் முதலமைச்சர் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.







