ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு பிறகு அவர் நீதிமன்ற காவலில் இருக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடர் சிகிச்சையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
கைது செய்யப்பட்ட பின்னர் செந்தில் பாலாஜியின் இலாகாக்கள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. பின்னர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி மறுத்த நிலையில், மீண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
”அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் கடுமையான குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதை தடுக்கிறார். குற்றவியல் வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சட்டத்தின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும். இத்தகைய சூழலின் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கம் செய்துள்ளார்”.
சுதந்திர இந்தியாவில் வரலாற்றில் முதலமைச்சர் பரிந்துரை இன்றி அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரை ஆளுநர் நீக்குவது இதுவே முதல்முறையாகும்.







