மாமன்னன் திரைப்படம் எனது விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளது. இனி நான் நடிக்க வாய்ப்பில்லை என நடிகரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாமன்னன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், மாமன்னன் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், இந்த திரைப்படத்தை எடுக்கவே முடியாது என நினைத்ததாகவும், உதயநிதி ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு கொடுத்து படம் உருவாக முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறி அவருக்கு நன்றி கூறினார்.
மேலும் நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகர் பட்டாளம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் பங்களிப்பால் தான் மாமன்னன் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தது எனவும் மாரி செல்வராஜ் கூறினார்.
இதனை அடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், திரைப்படத்தின் வெற்றிக்கு மாரி செல்வராஜின் உழைப்பே முக்கிய காரணம் என பாராட்டினார். மேலும் ஆறு மாத உழைப்பை மக்கள் கொண்டாடுவதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், மாமன்னன் திரைப்படம் தனது விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளது எனவும், இனி தான் நடிக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.
உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து பேசிய திரைப்படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் கூறவந்ததை சிறப்பாக கூறியுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மாமன்னன் திரைப்படம் பல நல்ல விசயங்கள் நடக்க ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும் என நம்புவதாகவும் கூறினார்.







