ரிசர்வ் வங்கி மீண்டும் அதிரடி – உயர்கிறது வீடு மற்றும் வாகன கடன்களுக்கான தவணைத்தொகை

ரிசர்வ் வங்கியின்  நிதிக் கொள்கையை இன்று வெளியிட்டார் அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ். இதில் ரெப்போ ரேட் 25 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கும் ஒருமுறை நாணயக் கொள்கையை முடிவு செய்யும் கூட்டம்…

ரிசர்வ் வங்கியின்  நிதிக் கொள்கையை இன்று வெளியிட்டார் அதன் ஆளுநர் சக்திகாந்த தாஸ். இதில் ரெப்போ ரேட் 25 புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கும் ஒருமுறை நாணயக் கொள்கையை முடிவு செய்யும் கூட்டம் ரிசர்வ் வங்கியில் நடைபெறும். அதன் படி இன்று காலை 10 மணி அளவில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்த இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக வட்டி விகிதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.

நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கியின் 6பேர் கொண்ட குழுவில் 6 பேரில் 4 பேர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதன் மூலம் தொடர்ந்து 6-வது முறையாக  ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கூட்ட முடிவில் SDF விகிதம் 6 சதவீதமாகவும், MSF 6.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.  இது  அக்டோபரில் 6.77 சதவீதமாக  இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதன் மூலம்  இனி அனைத்து விதமான கடன்களுக்குமான வட்டி உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 5 முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆர்பிஐ வங்கிகளின்  கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் கடன்களுக்கான ஈஎம்ஐ என அழைக்கப்படும் மாதாந்திர தவணை தொகையும்  அதிகரிக்கும்.  வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகன கடன், தங்க நகைக் கடன் வரையில் அனைத்திற்கும் வட்டி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்திருப்பதாவது..

கடந்த 3 ஆண்டுகளில் உலகளவில் ஏற்பட்ட மாற்றங்கள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளையும், போக்கையும் பெரிய அளவில் மாற்றியுள்ளது. டிசம்பர் 2022ல் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஒரு ஆண்டில் இல்லாத அளவிற்கு 5.72 சதவீதமாக குறைந்துள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் ஆர்பிஐ உறுதியாக உள்ளது. இந்தியாவில் போதுமான அளவு பணப்புழக்கம் உள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் இருப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். ஆசிய நாணயங்களில் அதிகம் தடுமாறாத நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்று” என ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

யாழன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.