ரெப்போ விகிதம் அதிகரிப்பு…வீட்டுக்கடன் வட்டியில் என்ன மாற்றம் ஏற்படும்?

8 மாதங்களில் ஐந்தாவது முறையாக கடனுக்கான வட்டியை அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. அதனால், ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம் விலைவாசி விண்ணைத்தொடும் நிலையில் உள்ளது. பணவீக்க விகிதமும்…

8 மாதங்களில் ஐந்தாவது முறையாக கடனுக்கான வட்டியை அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. அதனால், ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்

விலைவாசி விண்ணைத்தொடும் நிலையில் உள்ளது. பணவீக்க விகிதமும் நடைமுறையில் அச்சுறுத்தும் விதமாக 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியான ரெப்போ விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்ட முடிவுகளை மும்பையில் செய்தியாளர்களிடம் தெரிவித்த, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்,ரிசர்வ் வங்கி,வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

8 மாதங்களில் 5 முறை ரெப்போ அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டில் 8 மாதங்களில் , 5 வது முறையாக ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை அடுத்து, இனி வங்கிகளில் கடனுக்கான வட்டியும், தவணையும் மேலும் உயரும்

இனி ரெப்போ ரேட் 5.90 சதவீதத்திலிருந்து, 6.25 சதவீகிதமாக உயர்கிறது. .இதனால் சில்லறை கடன்,வீட்டு கடன்,வாகன கடன், தொழில் கடன் மற்றும் இதர கடன் வாங்கியவர்கள்,செலுத்தும் மாதாந்திர தவணையின் தொகை உயரும்,

மே மாதம் 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து ரெப்போ ரேட் 4.40 சதவீதமாகவும்,
ஜூன் மாதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாகவும்,
ஆகஸ்ட் மாதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.40 சதவீதமாகவும்,
செப்டம்பர் மாதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.90 சதவீதமாகவும் ரெப்போ ரேட் இருந்தது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் 35 அடிப்படை புள்ளிகள் ரெப்போ ரேட் விகிதம் உயர்த்தப்பட்டது. இதனால் ரெப்போ ரேட் 6.25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன் எவ்வாறு அதிகரிக்கும்?

நடப்பாண்டு 2022 மார்ச் மாதம், வங்கியில் வீட்டுக்கடனாக ,20 ஆண்டுகள் தவணையில் ,30 லட்சம் ரூபாய் பெற்றிருந்தால் , 7% ஆக இருந்த வட்டி விகிதம், 2023 ஜனவரி மாதம் 9.25% ஆக உயரும். 10 மாதத்தில் 2.25 % வட்டி விகிதம் உயர்கிறது. வங்கிக்கு செலுத்த வேண்டிய மாதத்தவணை ,23 ஆயிரத்து 258 ரூபாயிலிருந்து, 27 ஆயிரத்து 387 ரூபாயாக உயரும் எனக் கூறப்படுகிறது.

மேலும் சக்தி காந்த தாஸ் கூறுகையில், கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு, உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் ஆகிய காரணிகளால் இந்தியாவிலும் அதன் தாக்கம் சிறிதளவேனும் எதிரொலிக்கிறது. இந்தியாவிலும், பண வீக்க விகிதமும், விலைவாசியும் அதிகரித்துள்ளதை சக்தி காந்ததாஸ் ஒப்புக்கொண்டார். இந்தியாவில் அதிகரித்த தொழில்துறை செயல்பாடுகள், சில்லரை மற்றும் அதிகரித்த நுகர்வு போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் அவர் கூறினார். மேலும் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு, பணவீக்க விகிதத்தை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது.தேவையான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வால் பல நாடுகளின் பண மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.ஆனாலும் இந்த நெருக்கடியான சூழலிலும்,இந்திய ரூபாயும்,பொருளாதாரமும் நிலையாக இருக்கிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பெடரல் மற்றும் இதர நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் வட்டியை உயர்த்தி வருகின்றன என்று கூறிய சக்தி காந்த தாஸ், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாகவும் இருக்கும், என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் உள்ளிட்டவை பணவீக்கத்தை குறைக்க, வட்டி விகிதத்தை உயர்த்தின. அந்த வரிசையில் ரிசர்வ் வங்கியும் வட்டியை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில் வட்டியும்,விலைவாசியும் ஒன்றுடன், ஒன்று போட்டி போட்டுக்கொண்டு, சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறது என்றால் மிகையில்லை

– ரா.தங்கபாண்டியன்,நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.