ராமஜெயம் கொலை வழக்கு – விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் கடந்த 2012ல் நடைபயிற்சி சென்ற போது அமைச்சர்…

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் கடந்த 2012ல் நடைபயிற்சி சென்ற போது அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால், மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி கே.என்.நேருவின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. அந்த குழுவில் சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் ஆகின்றது. பல விசாரணை அமைப்புகள் விசாரித்துவிட்டன. நியாயம் கிடைக்கும் என இன்னும் நம்பிக்கை இருக்கிறதா? என நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

அப்போது ரவிசந்திரன் தலைமையில் ஆஜரான வழக்கறிஞர் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் திருப்தி அளிப்பதாகவும், நியாயம் கிடைக்கும் என நம்புகிறதாகவும் மனுதாரர் ரவிசந்திரன் தரப்பில் தெரிவித்தனர். இதனை அடுத்து அரசு தரப்பில் இதுவரை 1,040 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாகவும், சாட்சிகள் குறிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கை முடித்து வைக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது நீதிமன்ற உத்தரவுபடி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு அதன் விசாரணையை முடித்து விரைவில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.