மழைநீர் வடிகால் பணிகள்; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு

மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே முடிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் கால…

மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே முடிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் கால தாமதமாக நடைபெற்று வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவது குறித்து நியூஸ் 7 தமிழ் சார்பில் ”தவிக்கும் தலைநகரம்” என்ற தலைப்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளம், வருவாய், பொதுப்பணி, நகராட்சி நிர்வாகம், மின்சாரம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நீர் நிலைகள் பாதுகாப்பு, முகாம்கள், மீட்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஆய்வுப் பணிகள் உள்ளிட்டவைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கூடங்களில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்காது என நம்பிக்கை தெரிவித்த அவர், அரசுத்துறையுடன் மக்களும் ஒருங்கிணைந்து செயல்படும் சூழலை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய அவர், வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து சரியான தகவலை பெறுவதுடன், தனியார் வானிலை ஆய்வு ஆராய்ச்சியாளர்கள் தரும் தரவுகளையும் ஒப்பிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.