மதுரையில் அரசு பேருந்துக்குள் பெய்த மழையால் குடையுடன் குளிரில் நடுங்கியபடி பொதுமக்கள் பயணம் செய்தனர்.
மதுரை மாவட்டம் முழுவதிலும் இரு தினங்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை
பெய்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய அரசு
பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில், மழை நீர்
பேருந்தின் உள்ளே வடிந்து வருவதால் பயணிகள் அவதியடையும் நிலை தொடர்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு மதுரையில் மழை பெய்துகொண்டிருந்தபோது மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்றில் மழை தண்ணீர் வடிய தொடங்கியுள்ளது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் பேருந்துக்குள் குடையை பிடித்தபடியே பயணிக்க கூடிய நிலை ஏற்பட்டது.
மேலும் பேருந்தில் இருந்த பாதி மின்விளக்குகள் எரியாததனால் ஒரு பகுதி முழுவதிலும்
இருள் சூழ்ந்து காணப்பட்டது. மதுரை முதல் உசிலம்பட்டி செல்லும் வரைக்கும் அந்த
பேருந்தில் பயணித்த பயணிகள் மழையில் நனைந்தபடி குளிரில் நடுங்கியபடி
பயணித்தனர்.
பொதுமக்கள் பயணிக்க கூடிய இதுபோன்ற பேருந்துகளை முறையாக பராமரிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த
வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.







