சுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்தது திமுக – அண்ணாமலை விமர்சனம்

சுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்து அவர்களுக்கு குருபூஜை எடுக்கும் அளவுக்கு திமுக மாற்றியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

சுதந்திர போராட்ட தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்து அவர்களுக்கு குருபூஜை எடுக்கும் அளவுக்கு திமுக மாற்றியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது….

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  மிக முக்கியமான  கேள்விகளை எழுப்பியுள்ளார்.  நல்ல தலைவர்களை சாதிக்குள் அடக்கி வைத்து அவர்களுக்கு குருபூஜை எடுக்கும் அளவுக்கு மாற்றியவர்கள் திமுக அரசு மாற்றி வைத்துள்ளது.  இதனால் தான்  தமிழ்நாட்டில் சாதி கட்சிகள் அதிகரித்துள்ளன.

எத்தனை தலைவர்களின் பெயர்கள் தமிழ்நாடு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என தமிழ்நாடு அரசு வெள்ளையறிக்கை கொடுக்க வேண்டும்.  எதையும் செய்யாமல் சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களையும் இருட்டடிப்பு செய்துள்ளது திமுக அரசு.  கோபிசெட்டிபாளையத்துக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? எந்த ஊரில் பேருந்து நிலையம் திறந்தாலும், ஓடிச் சென்று கருணாநிதி பெயரை வைக்கும் திமுக அரசு, அந்த ஊரின் தலைவர்களின் பெயரை வைக்காதன் காரணம் என்ன?

பாரதியைப் பற்றி பேசுவதற்கு திமுக தலைவர்களுக்கு அருகதை இல்லை. 1970, 80 காலகட்டங்களில் பாரதியை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை.  மக்கள் மனதில் இருந்து பாரதியை அழிக்க முடியவில்லை எனத் தெரிந்த பிறகு, அவரது இல்லத்தை அரசுடைமையாக்கினார்.  வாரணாசியில் பாரதியார் நான்கு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.  மன வலியோடு சென்று வந்த இடத்தை நான் பார்த்து விட்டு வந்தேன்.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு நாடகமாடுகிறது.  நீட் தேர்வை தமிழகத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.  50 லட்சம் கையெழுத்து கூட வாங்க முடியவில்லை என்றால் எதற்காக கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

ஆரியன்- திராவிடன் தியரி ஒரு குப்பை.  அம்பேத்கர் கூறியது போல அது ஒரு குப்பை தொட்டி.  என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் ஆரியர்கள் யாரும் இல்லை என நான் பார்க்கிறேன்.  இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் ஆரியர்கள் இல்லையா? அகிலேஷ் யாதவ்,  மம்தா பானர்ஜி ஆரியர்களா? இல்லையா? ஆரியர்கள் என கூறுபவர்கள் இந்திய கூட்டணியில் இருந்து வெளியில் வரட்டும். எதற்காக மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும்?

நேற்று கௌதமியை சந்தித்தேன்.  இரண்டரை  ஆண்டுகளாக இந்த கட்சியில் இருந்தார். கண்டிப்பாக அவருக்கு மன உளைச்சல் இருக்கிறது.  இத்தனை ஆண்டுகளாக சம்பாதித்த பணத்தை யாரோ ஏமாற்றி இருக்கிறார்கள்.  மனநிம்மதி வேண்டும் என விரும்புகிறார் கவுதமி.  பாஜக சார்பிலோ அல்லது மாநில தலைவராகவோ என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன்.

இஸ்லாமியர்களோடு எங்களுக்கு பிரச்னை இல்லை.  தமிழ்நாட்டில் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு நாள் போட்டோ சூட்டுக்காக நடிக்கிறவர்கள் வேண்டாம் என இஸ்லாமியர்கள் முடிவெடுத்து விட்டார்கள்.  டி ஆர் பாலு அறிக்கையில் கவர்னரை ஒருமையில் திட்டுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார்.  தமிழர் ஒருவரை பிரதமராக நிறுத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருக்க வேண்டும்.

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.