மழை வெள்ள சீரமைப்பு பணி: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

மதுரையில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில்,முறையாக பணிகளை செய்யவில்லை என்றால் மேல் இடத்தில் புகார் செய்வேன் என்று அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தின்…

மதுரையில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில்,முறையாக பணிகளை செய்யவில்லை என்றால் மேல் இடத்தில் புகார் செய்வேன் என்று அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளுக்கு வாரம் தோறும் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைச்சர் மூர்த்தி
அதிகாரிகளுடன் சென்று மழை நீர் தேங்கக் கூடிய இடங்களை ஆய்வு செய்து  வருகிறார். மேலும் மழை நீர் தேங்கக் கூடிய இடங்களில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.

அதன்படி இன்று மதுரை உத்தங்குடி வளர் நகர், டி.எம். நகர், பாண்டி கோவில் ரிங் ரோடு, லேக் ஏரியா, வண்டியூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் வணிகவரி மற்றும்
பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆய்வு
மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சியின்
ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், மாநகராட்சியின் மேயர் இந்திராணி பொன் வசந்த்
மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

உத்தங்குடி அருகே அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பொழுது அப்பகுதியில் பணிகளை மேற்க்கொண்டு வரும் ஒப்பந்ததாரர் மழை நீர் வடிகாலுக்கு செல்லும் பகுதியை கல்லை போட்டு நீர் வழி பாதையை மூடுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து அதிகாரியிடம்  என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கேட்டார். அதற்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தாரிடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பேசிய அமைச்சர், நோட்டீஸ் அனுப்பி என்ன பயன்? ஒப்பந்ததாரர் கல்லை வைத்து கால்வாய் மறைத்துள்ளார், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேட்டார். தொடர்ந்து  இந்த கால்வாயில் மழை நீர் தேங்கினால் அதனால்  அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார். மேலும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேல் இடத்தில் உங்களை புகார் செய்வேன் என்றும் அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.  அதோடு இது உங்களுக்கு மக்கள் வசிக்கும் பகுதியாக தெரியவில்லையா என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார், இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

 

-பரசுராமன்.ப

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.