உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் உபரி நீர் முழுமையாக ஆற்றில் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் மூணாறு மறையூர் கோவில்கடவு பகுதிகளில் பெய்யும் கன மழையால், அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நள்ளிரவில் 5 ஆயிரம் கன அடிக்கு அதிமாக தண்ணீர் வரத்து வந்ததால் உபரி நீர் முழுமையாக ஆற்றில் திறக்கப்பட்டது.
இதனை அடுத்து தற்போது அமராவதி அணையிலிருந்து உபரி நீர் 5 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் மொத்த கொள்ளளவு 4.04 டிஎம்சி ஆகும். 90 அடிக்கு நீர் தேக்கி திருப்பூர் கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையால் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியது அணையிலிருந்து 4950 கன அடி நீர் உபரி நீராக திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 89 அடியாக உள்ளது.
90 அடி நீர் தேங்கும் வகையில் உள்ள அணையில் தற்போது 89 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.அணையிலிருந்து உபரிநீர் 5ஆயிரம் கன அடி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.இதன் காரணமாக அமராவதி ஆற்றில் எந்நேரமும் மேலும் உபரி நீர் திறப்பது அதிகரிக்கப்படலாம் என்பதால் ஆற்றங்கரை பகுதியில் வசிக்கும் திருப்பூர் கரூர் மாவட்ட பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.







