நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மிகவும் சோர்வடைந்ததாக கூறினார் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் நிதியுதவியில் செயல்பட்ட யங் இந்தியன் நிறுவனம் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை நடத்தி வந்தது. இதில் நிதிசார் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சோனியாவுக்கும், ராகுலுக்கும் அமலாக்கத் துறை விசாரணை அமைப்பு சம்மன் அனுப்பியது.
அதன்படி, ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் 5 நாட்களாக விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், விசாரணை குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், “விசாரணையின்போது “நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன்.” என்று எங்களிடம் ராகுல் கூறினார். உண்மை என்னவென்றால் 20 சதவீத கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர் புறக்கணித்தார். காலை 11 மணிக்கு வந்தால் இரவு 11 மணிக்கு தான் வீட்டுக்குச் செல்வார். ஒரு மணி நேர உணவு இடைவேளை அளிக்கப்பட்டது” என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, காங்கிரஸ் பிரமுகராக நான் பெற்ற பயிற்சி, அமலாக்கத் துறை அதிகாரிகளின் கேள்விகளை சமாளிக்க உதவியது என்று ராகுல் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, கொரோனா தொற்று பாதிப்பால் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு பெற்றிருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அவர் விசாரணைக்காக ஆஜராக வேண்டியிருந்தது. அப்போது தான் கொரோனாவிலிருந்து பூரண குணமடையும் வரை நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சோனியா கடிதம் அனுப்பியிருந்தார்.
அதைத் தொடர்ந்து அவரை ஜூலை மத்தியில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுமதி அளித்திருக்கிறது.
-மணிகண்டன்








