விஜய் சேதுபதி நடித்துள்ள “மாமனிதன்” படக் குழுவினருக்கு இயக்குநர் சங்கர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தர்மதுரை படத்தின் வெற்றிக்குப் பின்னர் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் சீனுராமசாமி மாமனிதன் படத்தில் இணைந்துள்ளனர். ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் யுவன்சங்கர் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருந்தது.
இதைத்தொடர்ந்து, இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ நைன் நிறுவனம் சார்பில் வாங்கிய ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் மே 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். பின்னர், மே 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
https://twitter.com/shankarshanmugh/status/1539994562608869382?t=8DCtkej3COdhWRQfWI1AbQ&s=08
இந்நிலையில், மாமனிதன் படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சங்கர், மாமனிதன் ஓர் நல்ல படத்தைப் பார்த்த திருப்தியை அளிக்கிறது. இயக்குநர் சீனுராமசாமி தனது இதயத்தையும், ஆன்மாவையும் வைத்து யதார்த்தமான படத்தைக் கொடுத்துள்ளார். விஜய் சேதுபதியின் அருமையான நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதிபடைத்தது. மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை ஆத்மார்த்தமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா







