மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணியின் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் 40 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் போட்டியிட்ட சிவசேனா பின்னர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் ‘மகா விகாஸ் அகாடி’ எனும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், சிவசேனாவின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே 50 எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலத்தில் தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார். இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சூழலிழல் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஷிண்டே, தனக்கு 50 எம்எல்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். இதில் 40 எம்எல்ஏக்கள் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 288 ஆகும்.
இதில் ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 53, காங்கிரஸ் 44 என எம்எல்ஏக்களை கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இந்நிலையில் சிவசேனா எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 56ல் 40 எம்எல்ஏக்கள் தன்னுடன் இருப்பதாக ஷிண்டே கூறியுள்ளார்.
சிவசேனாவின் மறைந்த மூத்த தலைவர் பால் தாக்ரேவின் இந்துத்துவா கொள்கைக்கு முரணாக சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணியமைத்துள்ளது என ஷிண்டே குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல சிவசேனா பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 113 எம்எல்ஏக்களை கொண்டுள்ள நிலையில், தற்போது ஷிண்டே 50 எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு ஆதரவாக சேர்ந்துள்ளார்.
இப்படியான சூழலில் ஷிண்டேவுடன் சென்ற சிவசேனா எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து நோட்டீஸ் வழங்கியுள்ளது அக்கட்சி. இது சட்டவிரோதம் என ஷிண்டே கூறியுள்ளார். தன்னிடம் மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தகுதி நீக்க நடவடிக்கை தொடரப்பட்டதையடுத்து, 37 எம்எல்ஏக்கள் ஷிண்டேவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டுமென ஆளுநர் மற்றும் துணை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.