சமத்துவம், சகோதரத்துவம், பாசம்தான் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, கே எஸ் அழகிரி, ஆர்.எஸ்.பாரதி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ராகுல் காந்தி, காலில் விழுந்து கிடப்பதும், கும்பிடு போட்டு இருக்கவேண்டும் என்பதும்தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் சித்தாந்தம் என சாடினார். மேலும், தமிழகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை நுழையவிடாமல் திமுக-காங்கிரஸ் கூட்டணி தடுக்கும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் இருந்து பாஜக, ஆர்எஸ்எஸ் விரட்டப்படும்போதுதான் தமிழகத்தின் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் எனக்கூறினார். மேலும், ஜனநயாகத்தின் அனைத்து அமைப்புகள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.







