காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரியின் இறுதிச் சடங்கு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான தலிவால் கண்டியனில் இன்று அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எம் பி ராகுல் காந்தி அவர்களும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது அவரோடு நடந்து சென்ற பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் தொகுதி எம்.பி யான சந்தோக் சிங் சௌத்ரி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையான நேற்று (14.01.23) உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோதா யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் மொத்தம் 150 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த நடைபயணமானது, தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று காலை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தியுடன் பஞ்சாப் மாநில ஜலந்தர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக் சிங் சௌத்ரியும் நடைப்பயணத்தை தொடர்ந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டு மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக அவரை பக்வாரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இதனால் மூத்த காங்கிரஸ் தலைவரின் திடீர் மறைவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தொடங்கிய அணிவகுப்பை ராகுல் காந்தி இடைநிறுத்தினார்.
இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான சந்தோக் சிங் சவுத்ரியின் இறுதிச் சடங்கு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான தலிவால் கண்டியனில் இன்று அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினார். இவரைத்தொடர்ந்து சந்தோக் சிங் சவுத்ரியின் மகன் விக்ரம்ஜித் சிங் சவுத்ரி, பில்லூர் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு தீபத்தை ஏற்றி வைத்தனர்.
மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், தேசிய பட்டியல் சாதிகளுக்கான ஆணையத் தலைவருமான விஜய் சாம்ப்லா மற்றும் பிற உள்ளூர் தலைவர்கள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்
இதன் பின்னர் இன்று மதியம் ஜலந்தரின் லயால்பூர் கல்சா கல்லூரியில் இருந்து சுமார் 3 மணிக்கு தொடங்கிய யாத்திரையில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ஜலந்தரில் இருந்து சௌத்ரிக்கு மரியாதை செலுத்தும் வகையில் யாத்திரை செல்லும் போது பாடல்களோ இசையோ இசைக்கப்படாது அல்லது முழக்கங்கள் எழுப்பப்படாது என்று தெரிவித்துள்ளார்.