சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுத் தொழிலுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று காலை முதலே தமிழ்நாட்டில் மக்கள் புத்தாடை உடுத்தி பொங்கல் வைத்து, “பொங்கலோ பொங்கல்” என்று கூறி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையொட்டி நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி பொங்கல் பண்டிக்கைக்கு தனது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உலகெங்கும் வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிரார்த்திக்கிறேன். மேலும் இந்த பண்டிகை நமது வாழ்வில் மகிழ்ச்சியையும் நல்ல உடல்நலத்தையும் வழங்கட்டும். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கதில் கோலத்துடன் புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு நல்ல வளமாக அமையட்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.







