8வது வந்தே பாரத் இரயில் – ஹைதராபாத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வந்தே பாரத் இரயில் சேவையின் எட்டாவது இரயிலை தெலங்கானா மாநிலத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி இணையத்தின் வாயிலாக திறந்து வைத்தார். ‘வந்தே பாரத்’ ரயில் திட்டம் இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் …

வந்தே பாரத் இரயில் சேவையின் எட்டாவது இரயிலை தெலங்கானா மாநிலத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி இணையத்தின் வாயிலாக திறந்து வைத்தார்.

‘வந்தே பாரத்’ ரயில் திட்டம் இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில்  செயல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி – வாரணாசி, டெல்லி – கோத்ரா, குஜராத் – மும்பை, இமாச்சலப் பிரதேசம்- புதுடெல்லி, கர்நாடகாவின் மைசூரு – சென்னை உட்பட 7 ‘வந்தே பாரத்’ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

மணிக்கு 160 முதல் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை ஏழு வந்தே பாரத் ரயில்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், எட்டாவது வந்தே பாரத் ரயிலை ஹைதராபத்தில் உள்ள செகந்திராபத் இரயில் நிலையத்திலிருந்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

8வது வந்தே பாரத் ரயில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை செல்லும் வகையில் இயக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், ராஜமந்திரி, விஜயவாடா, கம்மம், வாரங்கல், ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

வந்தே பாரத் ரயிலின் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில், சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷான் ரெட்டி, தெலங்கான மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தெலங்கான மாநில உள்துறை அமைச்சர் மஹ்மூது அலி உள்ளிட்டோர் நேரில்  பங்கேற்றனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..

8வது வந்தே பாரத் ரயிலின் மூலம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சுற்றுலா மேம்படும். அதன் மூலம்  பொருளாதாரம் வளரும் ” என்று பதிவிட்டுள்ளார்.

20833/20834 என்ற எண் கொண்ட இந்த இரயிலின் டிக்கெட் முன் பதிவுகளும் தொடங்கியுள்ளன. செகந்திராபத்திலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டிணத்திற்கு இந்த இரயில் 8 மணி 30 நிமிடத்தில் வந்து சேரும்   என எதிர் பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.