வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துள்ளதாக அரசு உயர் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் பாதுகாப்பு கோரிய வழக்கில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பூலாத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கொடைக்கானல் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 1.85 ஏக்கர் நிலம் அப்போதைய குன்னூர் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநராக இருந்த அம்பலவாணன் என்பவர் பினாமிகள் மூலம் வாங்கியதாக பொது நல வழக்கு தொடர்ந்ததாகவும், வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறைகேட்டுக்கு அப்போதைய வத்தலக்குண்டு சார் பதிவாளர் உடந்தையாக இருந்ததும், போலி வில்லங்க சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டதும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆவண மோசடி, ஆள்மாறாட்டம் ஆகியவற்றை சிபிசிஐடி வெளிக்கொண்டு வந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அம்பலவாணனின் தூண்டுதலின் பேரில் சிலர் தன் மீது பொய்யான புகார் கொடுத்துவருவதாகவும், அவற்றில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதுடன், பலரிடமிருந்து மிரட்டல்கள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தாண்டிக்குடி ஆய்வாளர் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.







