செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே தனியார் பள்ளி முழு கட்டணத்தையும் கட்டச் சொல்லி வற்புறுத்திய விவகாரத்தில் தாய் ஒருவர் தீக்குளித்த நிகழ்வு நடந்தேரியிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தில் சத்குரு குளோபல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. அழகுசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் வேணுகோபால் – வசந்த குமாரி தம்பதியின் 4 வயது மகள் யாழினியை இந்த பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்க்க முடிவு செய்தனர். கட்டண விவரம் குறித்து பெற்றோர் சென்று விசாரித்தபோது, எல்கேஜி வகுப்பில் சேர்க்க 30 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும், முழுக்கட்டணத்தையும் தற்போது செலுத்த தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. முதல் தவணையாக 13 ஆயிரத்து 500 ரூபாயை செலுத்தினால் போதும் என்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வசந்த குமாரியும் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை முதல் தவணையாக செலுத்தி நிலையில், பெற்றோர் குழந்தையை எல்கேஜி வகுப்பில் சேர்த்தனர். சில நாட்கள் கழித்து பள்ளியிலிருந்து தொடர்பு கொண்ட அலுவலக ஊழியர்கள் முழுத் தொகையையும் உடனடியாக செலுத்தினால் மட்டுமே குழந்தையை வகுப்பிற்குள் அனுமதிப்போம் என்றும், உடனடியாக முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது.
அதிர்ச்சியடைந்த வசந்த குமாரி பள்ளிக்குச் சென்று முதல்வரை சந்தித்து முழு கட்டணத்தையும் உடனே செலுத்த வேண்டாம் என கூறியதால் முதல் தவணை செலுத்தினேன் என்றும், உடனடியாக மீதி தொகையை செலுத்த முடியாது என்றும் தான் செலுத்திய முதல் தவணை தொகையை திருப்பிக்கொடுத்து விடுங்கள், தன் மகளை அரசு பள்ளியிலேயே சேர்த்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன்பிறகும் கூட ரூ.5 ஆயிரத்தை பிடித்தம் செய்த பிறகு மீதி தொகையான 8 ஆயிரத்து 500-ஐ மட்டும் அவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி கணவன் வேணுகோபாலிடம் கூறியபோது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. காரணம் ஆரம்பத்திலேயே மெட்ரிக் பள்ளியில் குழந்தையை சேர்த்துப் படிக்க வைத்தால் அதிக கட்டணம் கேட்பார்கள் என வேணுகோபால் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தன் குழந்தையை மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும் என வாதாடி முதல் தவணை கட்டணத்தை செலுத்தினார். இதில் ரூ.5 ஆயிரத்தை பள்ளி நிர்வாகம் எடுத்துக்கொண்டதால் தேவையில்லாமல் பணம் வீணாகி விட்டதாக வேணுகோபால் தனது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த வசந்த குமாரி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தன் உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து படுகாயமடைந்தார். பின் வசந்தகுமாரியை 80 சதவீதம் தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் வேணுகோபால். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வசந்த குமாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்து வந்த வசந்த குமாரியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து விரட்டி அடித்ததால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரர் உள்ளிட்ட போலீசார் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க அப்பகுதியில் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி நிர்வாகத்தின் பணத்தாசையால் குழந்தையை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடியாமல், மனமுடைந்த தாய் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.