தனித்தேர்வர்களுக்கு எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு; நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஜூன் 28-ம் தேதி  வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.  ஆகஸ்ட் 2023-ல் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு, நாளை…

8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஜூன் 28-ம் தேதி  வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 2023-ல் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு, நாளை முதல் ஜூன் 28-ம் தேதி வரை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று தனித் தேர்வர்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு பதிவு செய்யும் தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதியில் பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவு கட்டணம் 70 ரூபாய் என மொத்தம் ரூ.195 செலுத்த வேண்டும் எனவும், குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஜூன் 30 மற்றும் ஜூலை 1-ம் தேதி வரை தேர்வுக்கட்டணத்துடன் தட்கல் விண்ணப்ப கட்டணத்தொகை ரூ.500 கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பள்ளிப்பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் அல்லது சான்றிதழின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான விரிவான தகவல்களை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக 11-ம் தேதி வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுகான தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.