திருக்கோவில்களில் நடைப்பெறும் திருவிழாக்களில் பாரம்பரிய கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்கள், வழிபாடுகள், பிரம்மோற்சவம், தேர்த் திருவிழாக்கள், குடமுழுக்குகள், கொடை விழாக்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்யும் போது கலை நிகழ்ச்சிகளில் கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில்களின் தல வரலாறுகள் போன்றவற்றை தற்காலிக தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வண்ணமும், திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கண்டு களித்து மகிழும் வண்ணம் பாரம்பரிய கலை கலாச்சார ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் போது தமிழ்நாடு அரசு இசை கல்லூரி மற்றும் இசை பள்ளியில் பயின்று பயிற்சி பெற்ற கலைஞர்கள் மற்றும் கலை பண்பாட்டு துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களை கொண்டு நடத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது.








