அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு பிரத்யேக படுக்கைகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பெண்களின் முன்னேற்றத்திற்கான சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய சலுகையாக பெண்களுக்கான இலவச பேருந்து சேவை கருதப்படுகிறது. இந்த சலுகையால் பெண்கள் எவரையும் சார்ந்து இருக்காமல், பேருந்துகளில் பயணப்படும் சதவீதம் 60 சதவீதமாக உயர்ந்துள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் படுக்கை வசதியுடன் இயங்கும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்காக பிரத்யேக படுக்கைகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உட்பட அனைத்துப் பேருந்துகளிலும் இரண்டு படுக்கைகளை பெண்களுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் 1LB, 4LB ஆகிய படுக்கைகளை முன்பதிவின் போதே ஒதுக்க வேண்டும் எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பெண் பயணிகள் முன்பதிவு செய்யாத நேரங்களில் அந்த படுக்கைகளை பொது படுக்கைகளாக ஒதுக்கீடு செய்யலாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.







