தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு தொடங்கியது. வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தீர்மானத்திற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். 22 எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர். 5 எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகித்தனர்.
இதையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தவர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் நத்தம் ரா. விசுவநாதன், தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் எஸ்.பி. வேலுமணி, அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் சி.வி. சண்முகம், அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் ஆர். காமராஜ், அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் சி. விஜயபாஸ்கர், அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் பி. தங்கமணி அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கே.பி. அன்பழகன், அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் பா. பென்ஜமின் உள்ளிட்டோர் இன்று(மே 13) முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
விழுப்புரம், கோவை புறநகர் தெற்கு, புதுக்கோட்டை வடக்கு, நாமக்கல், திருவாரூர், திருவள்ளூர் மத்தி, ராணிப்பேட்டை கிழக்கு, ராணிப்பேட்டை மேற்கு, திருப்பத்தூர், கடலூர் வடக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகர், திருச்சி மாநகர், கரூர், தேனி மேற்கு, திருநெல்வேலி புறநகர் ஆகிய மாவட்டங்களின், மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.







