முக்கியச் செய்திகள் கட்டுரைகள் சினிமா

விமர்சனம்; எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா பொன்னியின் செல்வன்?


சி.பிரபாகரன் 

“உன்னுடைய எஜமானர் ஆதித்த கரிகாலர், வீர பாண்டியனுடைய தலையை வெட்டி எடுத்துக்கொண்டு வந்து ஊர்வலம் விடவில்லையா?” என்றார் குடந்தை சோதிடர். ”அவர் ஏதோ சபதம் செய்திருந்த படியால் அவ்விதம் செய்தார். அதற்காகப் பிறகு எவ்வளவோ வருத்தப்பட்டார்.” என்று பதிலளித்தான் வந்தியதேவன்.

இவர்கள் பேசும் சம்பவத்தை நீங்கள் படத்தில் பார்க்கலாம். ஆனால், அந்த குடந்தை சோதிடர் கதாப்பாத்திரத்தை பார்க்க முடியாது. இப்படியாக, நாவலில் இருந்து ’தேவையற்றது’ என சிலவற்றை வெட்டியும், தனது சில கற்பனைகளை ஒட்டியும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொன்னியின் செல்வன் நாவலை மட்டும், திரைப்படமாக எடுக்க பல முறை முயற்சிகள் செய்து, பல வருடங்களாய் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, தற்போது அந்த நாவல் திரைப்படமாக உருவாகியுள்ளதே இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


லைகா தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், கல்கியின் எழுத்தில், கற்பனைக் கலந்த வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவல், தற்போது திரைப்படமாக வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் 2022 செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தர சோழராக பிரகாஷ்ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சுந்தர சோழரின் உடல்நிலை சரியில்லாமல் போக, அடுத்த அரசராக அவரது மூத்த மகன் ஆதித்த கரிகலான் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்த முடிவை ஏற்க முடியாத பெரிய மற்றும் சின்ன பழுவேட்டரையர் உட்பட அதிருப்தி குறுநில மன்னர்கள், அரசை கவிழ்க்க திட்டமிடுகின்றனர். மதுராந்தகனை அரசராக்கும் முயற்சியிலும் இறங்குகின்றனர். இத்தகவலைத்  தனது தந்தையான அரசனிடமும், தங்கை குந்தவையிடமும் சென்று சேர்க்க, காஞ்சியில் இருந்து தஞ்சைக்கு வந்தியதேவனை தூது அனுப்புகிறான் ஆதித்த கரிகாலன். மறுபக்கம் ஆதித்த கரிகாலனை வென்றெடுக்க நினைக்கும் நந்தினியின் சூழ்ச்சிகளும், தந்தை, சகோதரன், ஆட்சி என மூன்றையும் காப்பாற்ற துடிக்கும், குந்தவை மற்றும் அருண்மொழி வர்மன் என அடுத்தடுத்த திருப்பங்களுடனும், சுவாரஸ்யங்களுடனும் நகர்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். படத்தின் ஆரம்பம், நடிகர் கமல்ஹாசனின் குரலிலேயே விவரிக்கப்பட்டு தொடங்குகிறது. சோழர்கள் காலத்தில் தமிழ்நாடு எப்படி இருந்தது என்பதை படித்து மட்டுமே பார்த்து வந்த நமக்கு, முதன்முதலாக காட்சிப் படுத்திக் காட்டியிருக்கிறார் மணிரத்னம்.

இருப்பினும், வீடுகள், வாழ்விடங்களை விட கடைத்தெரு சந்தைகளும், சுடுமணலும், அதோடு சோழ ராஜ்ஜியங்களுமே அதிகம் காண்பிக்கப்படுகின்றன. விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, ஜெயராம் என அனைவரும் தங்களது கதாப்பாத்திரங்களுக்கு முடிந்தளவு நியாயம் செய்திருக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமின் நடிப்பு, ராவணன் வீரா கதாப்பாத்திரத்தையே நியாபகப்படுத்துகிறது. குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் வாழ்ந்திருக்கின்றனர் என்றே கூற வேண்டும். கச்சிதமான பொருத்தம். ஒளிப்பதிவை பொறுத்தவரை முக்கிய காட்சிகள் சாமர்த்தியமாகவே கையாண்டுள்ளார் ரவி வர்மன். திரைக்கதையை மணிரத்னம், குமரவேல், ஜெயமோகன் ஆகிய மூவரும் எழுதியுள்ளனர்.

படத்தின் முதல் பாதி கதாப்பாத்திரங்கள் யார்? யார்? என அறிமுகம் செய்வது, கதைக்குள் நுழைவது போன்றவற்றால் சற்று தோய்வு ஏற்பட்டு அயற்சியை தருகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் கதை சூடுபிடிக்க சுவாரஸ்யமாகவே செல்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு அந்த சுவாரஸ்யத்தின் காரணமாய் அமைகிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசையே படத்தின் முக்கிய பலம். இதுவரை periodic filmகளில் இல்லாத வகையிலேயே புதுவிதமான, அதே சமயம் காட்சிகளுக்கு ஏற்ப கச்சிதமான இசையாகவும் அமைகிறது. அதிலும், நந்தினியும் குந்தவையும் சந்திக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரகுமானின் இசை, அந்த காட்சியின் முக்கியத்துவத்தை கூட்டுவதோடு, தனி கவனத்தையும் பெறுகிறது. முக்கியமாக, க்ளைமாக்ஸ் காட்சியில், அனைத்து துறையினரின் உழைப்பும் அலாதியானது என்றே கூறவேண்டும்.

நாவலை திரைப்படமாக உருவாக்குவதனால், தேவையற்ற சிலவற்றை தவிர்த்துள்ளார் மணிரத்னம். வந்தியத்தேவன் குடந்தை சோதிடரை சந்திக்கும் காட்சிகள் இடம்பெறவில்லை. வந்தியத்தேவனும் அருண்மொழி வர்மனும் சந்திக்கும் காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன. கப்பலில் ரவிதாசனிடம் வந்தியத்தேவன் சிக்குவது என பல காட்சிகள் படத்தின் ஓட்டத்திற்கேற்ப மாற்றியுள்ளார் மணிரத்னம். நாவலில் வந்தியத்தேவனில் தொடங்கும் காட்சி, திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனிடம் தொடங்குகிறது. இது போன்ற சிறிய மாற்றங்கள் தான். கலை வடிவமைப்பு, ஆடை அலங்காரம், கலை வடிவமைப்பு என அனைவரும் தங்களது பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளனர்.

இடைவேளைக் காட்சியும், க்ளைமேக்ஸ் காட்சியும் படத்தை தாங்கி பிடிக்கின்றன. மற்ற காட்சிகள் எதுவும் நெஞ்சில் நின்றபாடாக இல்லை. முதல் பாகத்தை ஊமைத் தாயை வைத்து முடித்துள்ள நிலையில், இரண்டாம் பாகம் 2023ல் வெளியாகும் என படத்தின் இறுதியிலேயே அறிவிப்பு வெளியாகிறது. படம் தொடங்கி, கதாப்பாத்திரங்கள் யார்? யார்? என்பதும், கதை என்ன என்பதையும் உணர ரசிகர்களுக்கு சிறிது நேரம் எடுக்கும். அப்படி சிறிது நேரம் பொறுமைகாத்தால் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுப் படத்தை சுவாரஸ்யத்துடனே ரசிக்கலாம்..

 

– சி.பிரபாகரன் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளி மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்ற  இரு நபர்கள் போக்சோ சட்டத்தில் கைது

EZHILARASAN D

தமிழ்நாட்டில் 600-ஐ நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

Web Editor

தனியார் மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழப்பு?

Gayathri Venkatesan