கல்கி எழுதிய புத்தகத்தின் உலகத்திற்கு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் அழைத்துச் செல்கிறது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ளார்.
கல்கி எழுதிய புத்தகமான பொன்னியின் செல்வன் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இயக்குநர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி இந்தத் திரைப்படத்தைக் காண அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் அலைமோதும் நிலையில் சென்னை வடபழனி ஃபோரம் மாலில் உள்ள ஐ மேக்ஸ் திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகை திரிஷா, நடிகர் ஜெயம் ரவி,நடிகர் ரஹ்மான் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பார்த்தனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் “கல்கி எழுதிய புத்தகத்தின் உலகத்திற்கு உள்ளேயே மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படம் அழைத்துச் செல்கிறது.மணிரத்தினத்தைத் தவிர வேறு யாரும் இந்த படத்தை அவ்வளவு வேட்கையுடன் தத்ரூபமாக எடுத்திருக்க முடியாது என்றார்.
பொன்னியின் செல்வன் உலகத்தை நான் தற்போது தான் பார்க்கிறேன். படம் மிகவும் பயங்கரமாகச் சிறப்பாக இருக்கிறது.கேம் ஆப் த்ரோன்ஸ் மிகப்பெரிய படம் என்று நாம் இதுவரை சொல்லியது போல தற்போது அதற்கு நிகராக பொன்னியின் செல்வன் படத்தைச் சொல்ல முடியும் எனப் படத்தில் சிறிதளவு கூட குறை இல்லை படம் மிகவும் பயங்கரமாக இருக்கிறது” எனப் பேசினார்.







