பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29 தேதி நடைபெறும் என்று புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் முதல் பாகம் கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள் : ராகுல் தகுதி நீக்கம் எதிரொலி; தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை இரவு உள்ளிருப்பு போராட்டம் – காங். அறிவிப்பு
இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 20 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.
https://twitter.com/LycaProductions/status/1639882556186464257
இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக ஏ.ஆர்.ரகுமான் ஸ்டுடியோவில் இசையமைப்பது போன்ற க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டும், இரண்டு போஸ்டர்களை வெளியிட்டும், படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு, இன்று ஜெயம் ரவி(அருண்மொழிவர்மன்) , ஐஸ்வர்யா லக்ஷ்மி (பூங்குழலி), ஷோபிதா (வானதி) ஆகியோர் இடம்பெற்றிருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது.








