பழனி கோயில் நில மோசடி வழக்கு : சிபிசிஐடி-யிடம் ஆஜரான குப்புசாமி மணியகாரரின் வாரிசுதாரர்கள்…!

பழனி கோயில் நில மோசடி வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் குப்புசாமி மணியகாரரின் வாரிசுதாரர்கள் ஆஜராகியுள்ளனர்.

பழனி கோயில் அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வெறும் 2 கோடிக்கு பத்திர பதிவு செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தற்போது ஜாமின் பெற்றார்.

இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு நிலத்தை கொடுத்ததாக கூறப்படும் குப்புசாமி மணியகாரரின் வாரிசுதாரர்களான சுந்தரி மற்றும் அவரது மகன் விஷ்ணு சுதர்சன், மகள் ஜெயலட்சுமி ஆகியோர் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.

மேலும் அவர்கள் நிலம் தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவணங்களையும் (பத்திரம்) கொண்டு சென்றுள்ளனர். இந்த ஆவணங்களை சிபிசிஐடி எஸ்.பி. ஷாஜிதா ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.