நாட்டின் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்கள் முன்னேறி வருகின்றனர்: பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டின் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்கள் முன்னேறி வருவதாக, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல்…

நாட்டின் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்கள் முன்னேறி வருவதாக, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதன்படி இந்த மாதத்திற்கான மனதின் குரல் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இது 99-வது மனதின் குரல் நிகழ்ச்சியாகும். இது இந்த ஆண்டில் இரண்டாவது மனதின் குரல் நிகழ்ச்சியாகும்.

இந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டில் பெண் சக்திக்கு முதலில் தலைவணங்குவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டில், அதிகாரம் மிக்க பதவிகளுக்கு பெண்களும் முன்னேறி வருவதாக கூறினார். பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும், கடந்த 75 ஆண்டுகளில் முதன் முறையாக நாகாலாந்து மாநிலத்தில் 2 பெண்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆகி உள்ளதாகவும், அதில் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய பிரதமர், தி எலிபெண்ட் விஸ்பெரரஸ் ஆவண குறும்படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்று இந்திய பெண்கள் பெருமை சேர்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

சமீபகாலமாக, இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் நம் கண்முன் வெளிவந்துள்ளன. நீங்கள் ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவை பற்றியும் சமூக வலைதளங்களில் பார்த்திருக்க கூடும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெண் லோகோ பைலட் என்ற சாதனையையும் சுரேகா ஜி படைத்துள்ளார். “பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியான சகோதரி ஜோதிர்மயி மொஹந்தியும் நாட்டிற்கு மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார். ஜோதிர்மயி வேதியியல் மற்றும் வேதியியல் பொறியியல் துறையில் ஐயுபிஏசி-யின் சிறப்பு விருதைப் பெற்றுள்ளார். டி-20 உலகக் கோப்பையை வென்றதன் மூலம், இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணி வரலாறு படைத்தது.

அதேபோல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காகச் சென்ற NDRF குழுவின் பெண் உறுப்பினர்களையும் குறிப்பிட்ட பிரதமர் மோடி , “ஐ.நா. பணியின் கீழ் அமைதி காக்கும் படையில் பெண்கள் மட்டுமான படைப்பிரிவையும் இந்தியா நிறுத்தியுள்ளது” என்று பெருமிதமாக மோடி கூறினார்.

மேலும் குரூப் கேப்டன் ஷாலிஜா தாமி, போர்ப் பிரிவில் கமாண்ட் நியமனம் பெற்ற முதல் பெண் விமானப்படை அதிகாரி என்று கூறிய பிரதமர், சியாச்சினில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் அதிகாரியான இந்திய ராணுவத்தின் கேப்டன் ஷிவா சவுகானையும் மோடி குறிப்பிட்ட தவறவில்லை. இப்படி இந்தியாவின் தலைச்சிறந்த பதவிகளில் உயர்பொறுப்பு வகிக்கும் பெண்களை பாராட்டி பேசிய பிரதமர் மோடி உடல் உறுப்பு தானம் மற்றும் சூரிய சக்தியின் முக்கியத்துவத்தையும் தனது ஒளிபரப்பில் எடுத்துரைத்தார். அப்போது கடந்த ஆண்டில் மட்டும் நாட்டில் 22 ஆயிரம் பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார் .

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.