தவெகவின் ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.
எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பங்கேற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவதாக பாடப்பட்டது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி முதலாவதாக ‘வந்தே மாதரம்’ பாடலும், இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டன. மாநில அளவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து மாநில உரிமைகளை இழந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் தவெக அரசு மீது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். கூட்டணி கட்சியான சிபிஎம்-மின் மாநில செயலாளர் பெ. சண்முகமும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு சென்றதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.




