புதுக்கோட்டை மாப்பிள்ளையை கரம்பிடித்த போலாந்து நாட்டு மருமகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
புதுக்கோட்டை பூசத்துறை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் – புவனேஸ்வரி தம்பதியினர். பாலகிருஷ்ணன் திருச்சி பகுதியில் கைக்கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடையை நடத்தி வருகிறார். இந்த தம்பதியரின் மகனான அருணகிரி என்கின்ற அருண் பிரசாத் எம்பிஏ படித்துவிட்டு போலாந்து நாட்டில் பணிக்கு சென்றார். அங்கு பணிக்கு சேர்ந்த சிறிது காலத்தில் தனியாக கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்த நிலையில், அவரது நிறுவனத்திற்கு பணிநிமித்தமாக வந்த போலந்தைச் சேர்ந்த ஹனியா என்கின்ற அன்னாரில்ஸிகா என்பவருடன் நட்பு ஏற்பட்டு அந்த நட்பே பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
இதன்பிறகு வாழ்க்கையில் ஒருசேர ஆசைப்பட்ட இருவரும் போலந்து நாட்டில் சட்டப்படி நிச்சயம் செய்துக்கொண்டனர். இதனையடுத்து தான் திருமணம் செய்துகொண்ட விசயத்தை அருண் பிரசாத் பெற்றோர்களிடம் சொல்லவும் அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தது மட்டுமின்றி, நமது இந்து முறைப்படியும் சொந்த ஊரில் திருமணம் செய்ய ஆசைப்படுவதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மத நம்பிக்கை கொண்ட ஹனியாவும் இந்தியாவுக்கு வர வேண்டுமென்ற முடிவில் அதற்கு சம்மதம் தெரிவித்து, கணவர் அருண்பிரசாத்துடன் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இங்கு வந்த இருவருக்கும் திருமணம் புதுக்கோட்டை அன்னவாசல் செல்லும் சாலையில் உள்ள செல்லுக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கோலகலமாக இன்று திருமணம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டு அருண் பிரசாத் – ஹனியா தம்பதியை வாழ்த்தி சென்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









