தலித் இளைஞரை காலணியை நக்கச் சொன்ன கொடூரமான சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
பழங்குடியின இளைஞர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த பழங்குடியின இளைஞரை வீட்டுக்கே வரவழைத்து அவரது கால்களை கழுவிட்டு அவரிடம் மன்னிப்பையும் கேட்டார் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான்.
இந்த சம்பவம் நடந்த செய்தியின் அதிர்ச்சியில் மீளாத நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திர பிரதேசத்தை சார்ந்த தலித் சமூகத்தை இளைஞர் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த நபர் தனது காலணியை நக்கச் சொல்லி துன்புறுத்தியுள்ள வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 6ம் தேதி ராஜேந்திர சாமர் எனும் தலித் இளைஞர் தனது தாய்மாமன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே மின்சாரம் தடைபட்டுள்ளது. உடனே அவர் எதனால் தடைபட்டது என்பது குறித்து சோதித்து பார்த்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மின்துறையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் தேஜ்பால் சிங் படேல் அவரை சாதி பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.
இதன் பின்னர் தேஜ்பால் சிங்கின் படேல் தனது காலணியை நக்கச் சொல்லியும் மன்னிப்பு கேட்க சொல்லியும் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து தலித் இளைஞர் காலணியை நக்கும் வீடியோ வெளியான நிலையில் அது காவல்துறையின் கவனத்திற்கு சென்றது.
இதனையடுத்து தலித் இளைஞர் ராஜேந்திர சாமர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேஜ்பால் சிங்கை கைது செய்துள்ளனர், மேலும் அவர் மின்துறை பணியிலிருந்தும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.







