ஆம்புலன்ஸை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் நகரில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டும், கடந்த ஏப்ரல் மாதத்தின்போது, கோலாகலமாகத் தொடங்கியது. வாணவேடிக்கைக்கு அடுத்த நாள், இந்த திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதேநேரத்தில் இந்த திருவிழாவில் மோதல் ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் :ChennaiRains | நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை… அதிகபட்சமாக மழை பதிவு எங்கே?
இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்வதற்காக ஆம்புலன்ஸில் பயணித்து சம்பவ இடத்திற்கு மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி சென்றார். இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, ஆம்புலன்ஸை தவறாகப் பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதுடன், முதற்கட்ட விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.
மருத்துவ அவசர தேவைகளுக்கான ஆம்புலன்ஸ், மருத்துவம் அல்லாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த விவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு குறித்து விசாரணை உட்பட மூன்று நிலை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.







