அன்புமணிக்கு தலைவர் பதவி ; ஜிகே மணிக்கு..?

பாட்டாளி மக்கள் கட்சியின் 2.O திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் விதமாக அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணிக்கு புதிய பதவி என்றால் பாமகவின் தலைவராக தற்போதுள்ள ஜி.கே மணிக்கு…

பாட்டாளி மக்கள் கட்சியின் 2.O திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் விதமாக அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்புமணிக்கு புதிய பதவி என்றால் பாமகவின் தலைவராக தற்போதுள்ள ஜி.கே மணிக்கு அக்கட்சியில் என்ன பதவி கொடுக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே. இது குறித்து பாமக வட்டாரங்களில் விசாரித்தபோது, பாமகவின் சட்டமன்ற குழுத் தலைவராகவும் ஜிகே மணி உள்ளார். அத்தோடு மட்டுமில்லாமல், அவர் பொதுவாழ்விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகின்றன. அப்படிப்பட்ட மூத்த நிர்வாகிகளுக்கு என்ன விதமான பதவிகளை பாட்டாளி மக்கள் கட்சி வழங்கவுள்ளது என்பது குறித்து விவரிக்கிறார் இராமானுஜம்.

கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வரும் 24ஆம் தேதி ஜி.கே.மணியின் 25 ஆண்டுகள் கால பொதுவாழ்வை சிறப்பிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு பெரிய பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதத்தில், பாட்டாளி மக்கள் கட்சியில் ஜி.கே.மணிக்கு என தனி வரலாறு உண்டு. பொதுவாழ்க்கையில் நான்  எப்போது அடியெடுத்து வைத்தேனோ, அப்போதிலிருந்தே அவர் என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். 1980ம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே ட்ரிபிள் எஸ் (SSS) என்றழைக்கப்பட்ட சமூக சேவை சங்கத்தில் எனக்கு அவர் அறிமுகம் ஆனார். அப்போதே அவரது துடிப்பான செயல்பாடுகள் என்னை ஈர்த்தன. அதன் பின்னர் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போதும் அவர் எனது வழியிலேயே பயணித்தார். பாட்டாளி மக்கள் கட்சியிலும் எனது கால் தடங்களையே அவரது பாதங்கள் பின்பற்றி வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சிப் பணிகளை செய்து முடிப்பதில் ஜி.கே.மணி எனது தளபதி. உணர்வுகளை அறிந்து செயல்படுவதில் அவர் எனது மனசாட்சி. தொண்டர்களுக்கு ஒன்றென்றால், துடித்துக் கொண்டு போய் உதவுவார். அதனால் தான் 1998-ஆம் ஆண்டில் தொடங்கி இப்போது வரை தொடர்ந்து 12 முறை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 25-ஆவது ஆண்டாக இந்தப் பதவியை அவர் வகித்து வருகிறார். பா.ம.க. தலைவர் பதவியில் ஜி.கே.மணியின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அவருக்கு வரும் 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படவிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்திற்கும், அன்புமணியை மாநில தலைவராக அறிவிக்கவுள்ளதற்கும் என்ன சம்பந்தம் எனக்கேட்டால், அதற்கு அந்த நிர்வாகி, பாமகவை பொறுத்தவரை சீனியர்களை ஒரங்கட்டிவிட்டு ஜூனியர்களுக்கு முக்கியத்துவம் என்ற நிலை இருக்கக்கூடாது என்பதை தொண்டர்களும் உணர வேண்டும் என்பதே ஆகும் என்கிறார். அதாவது அன்புமணி பதவிக்கு வந்தாலும் ஜி.கே.மணி போன்ற சீனியர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதே இதன் சாரம்சம் என்கிறார்.

அதேபோல், ஒவ்வொரு மாவட்டங்களிலும் இரண்டு குரூப்களாக பல்வேறு கட்சிகளில் செயல்படுகின்றனர். அதுபோன்ற நிலை பாமகவில் களைய வேண்டும் என்பதற்காக கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் என்ற பதவி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. பல்வேறு மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர் ஒரு அணியாகவும், மாநில துணைப் பொதுச்செயலாளர் ஒரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். இது எங்களை போன்று வளரும் கட்சிக்கு உகந்தது அல்ல என்பதால் மாநில துணைப்பொதுசெயலாளர் பதவியை நிறுவனர் ராமதாஸ் முற்றிலுமாக ஒழித்துவிட்டார் என்கிறார் அந்த நிர்வாகி.

வட மாவட்டங்கள் போன்று மற்ற மாவட்டங்களிலும் கட்சியை வலுப்படுத்தும் விதமாக கடந்த ஒரு மாதமாக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி மண்டல வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது நிர்வாகிகளும், தொண்டர்களும் கூறும் கருத்தை ஒரு அறிக்கையாக ராமதாசிடம் அவர் அளிக்கவுள்ளதாக தெரிகிறது. இது பாமக  2.O – வின் ஒரு முக்கிய பிளான் என்கிறார் அந்த நிர்வாகி.

இந்த சூழ்நிலையில்தான் பாமகவில் மாநில பொதுக்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி திருவேற்காட்டில் நடைபெறுகிறது. அதில் மாநில இளைஞரணி தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே தலைவராக உள்ள ஜி.கே.மணி அக்கட்சியின் ஆலோசனை குழுவின் தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளது. அதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தலைவராக சீனியர் ஒருவரையும், மாவட்டச் செயலாளராக ஜூனியர் ஒருவரையும் நியமிக்கலாமா ? என பாமகவில் ஆலோசனைகள் நடப்பதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இராமானுஜம்.கி

 

 

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.