“சிறைப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

இலங்கை தடுப்பு முகாமில் வதைபடும் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகும் 9 தமிழ்நாட்டு மீனவர்களை தாயகம் மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 11 தமிழ்நாட்டு மீனவர்களில் 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் கடந்த 03.02.26 அன்று விடுவித்த நிலையில், படகை இயக்கிய 3 மீனவர்களுக்கு மட்டும் 6 மாத கடுங்காவல் தண்டனையும், 11.60 இலட்சம் தண்டமும் விதித்ததோடு, தண்டத்தை செலுத்த தவறும் நிலையில் மேலும் 3 மாதகாலம் கூடுதல் சிறைதண்டனையும் விதித்த கொடுமையும் அரங்கேறியது.

ஆனால், நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட 9 மீனவச்சொந்தங்களையும் இதுவரை தாயகம் திரும்ப அனுமதிக்காமல் இனவெறி இலங்கை அரசு மிரிஹானா தடுப்பு முகாமில் அடைத்துவைத்து பெருங்கொடுமை புரிந்து வருகிறது. இதனால் சிறைபட்டுள்ள மீனவச்சொந்தங்களின் உறவினர்கள் பெரும் கவலையும், மிகுந்த வேதனையும் அடைந்துள்ளனர். சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 மீனவர்களின் குடும்பத்தினர் ஏழ்மைநிலை காரணமாக தண்டத்தொகை செலுத்த வழியின்றியும் தவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்படாமல் தடுக்கத்தான் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும், ஒன்றிய – மாநில அரசுகள் இதுவரை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை தாயகம் மீட்கக்கூட எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, இனவெறி மிகுந்த இலங்கை அரசின் தடுப்பு முகாமில் வதைபட விடுவது பேரவலமாகும். இது தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் மேலும் மேலும் துன்புறுத்தும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும். குஜராத், ராஜஸ்தான் மீனவர்கள் என்றால் பதறித்துடிக்கும் பாஜக அரசு, தமிழ்நாட்டு மீனவர்கள் என்றால் அலட்சியம் செய்வது தமிழர்கள் மீதான இனப்பாகுபாடு அன்றி வேறென்ன?

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் மீனவச்சொந்தங்களை விடுவிக்க, வழக்கம்போல ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டும் எழுதி அமைதிகாப்பது மற்றுமொரு பெருங்கொடுமையாகும். திமுக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகள் முழுவதும் கடிதம் மட்டுமே எழுதியதனால் தமிழக மீனவர்களுக்கு விளைந்த நன்மை என்ன? இலங்கை அரசால் விதிக்கப்பட்ட தண்டத்தொகையை செலுத்தி மீனவச்சொந்தங்களை மீட்பதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட திமுக, தமிழ்நாட்டு மீனவர்களின் நலனைக் காக்க இதுவரை எடுத்த நடவடிக்கைதான் என்ன? ஒன்றுமில்லையே! இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ்நாட்டு மீனவர்களை திமுக அரசு இப்படி ஏமாற்றப்போகிறது? இதுதான் திமுக அரசு தமிழ் நாட்டையும் மக்களையும் காக்கும் முறையா?

ஆகவே, இலங்கை தடுப்பு முகாமில் வதைபடும் 9 மீனவர்கள் உட்பட, மேலும் 3 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டத்தொகையை அரசே செலுத்தி, சிறையிலிருந்து விடுவித்து, 11 மீனவச்சொந்தங்களையும் விரைந்து தாயகம் மீட்டு, தவித்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீரை துடைத்திட ஒன்றிய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.