ராஜஸ்தான் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த தமிழக வீரர்

ராஜஸ்தான் ராயல்ஸ்-சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 68ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு அதில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் காரணமாக இருந்தார். மும்பையில் நேற்று நடைபெற்ற 68ஆவது லீக்…

ராஜஸ்தான் ராயல்ஸ்-சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 68ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு அதில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் காரணமாக இருந்தார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற 68ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 151 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தானுக்கு நிர்ணயித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினார். அதேநேரம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர், 2 ரன்களில் ஆட்டமிழந்தார். யஷாஸ்வி நிதானமாக விளையாடி வந்தார். அதே நேரம், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது ராஜஸ்தான் அணி. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களிலும், அதிரடி ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, களமிறங்கிய அஸ்வின், சிறப்பாக விளையாடினார்.

பந்துவீச்சிலும், ஃபீல்டிங்கிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையான சவாலைக் கொடுத்தது. இருப்பினும், சிஎஸ்கே வீரர்களின் உத்திகளை சிறப்பாகக் கையாண்டு சிக்சர்களையும் பவுண்டரிகளையும் விரட்டினார் அஸ்வின். மற்றொரு புறம் ஜெய்ஸ்வாலும் சிறப்பாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார். எதிர்பாராதவிதமாக பிரசாந்த் சோலங்கி வீசிய பந்தில் மதீஷா பதிராணாவிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால்.

இருப்பினும், தனது பேட்டிங் திறமையைப் பயன்படுத்தி சாதுரியமாக விளையாடிய அஸ்வின் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 19.4வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் வெற்றி கண்டது. 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய அஸ்வின், ஆட்டநாயகன் விருதும் வென்றார். பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசிய அவர், 28 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றி மூலம் புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.